திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேசுகையில்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக முதல்வரின் முகவரி, இணையதளம் மூலம் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, இ-சேவை வாயிலாக வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவை வழங்குவது குறித்து கேட்டறிந்து,
அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் , மேலும் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், திருமண உதவி திட்டம்,
திட்டங்கள் மற்றும் தோழி தங்கும் விடுதி கட்டுமான பணியின் தற்போதைய நிலை குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல், ஊட்டசத்து உறுதி செய்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தினந்தோறும் கண்காணிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக இயக்கப்படவுள்ள புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ள மினி பேருந்துகளின் குறித்தும், போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முக்கிய தினங்களில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை குறித்தும், திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதிபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில் குமார், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சரண்யாதேவி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு. பிரகாஷ் (திருவண்ணாமலை), மரு.சதீஷ் (செய்யாறு) மற்றும் அனைத்து துறைச்சார்ந்த முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.