Close
மார்ச் 23, 2025 1:23 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலை அமைக்க வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலையை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் கண்ணகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு பி.எம். கிஸான் நிதியுதவி பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை பகுதியில் மலர் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. ஆனால், போதுமான விலையும், லாபமும் கிடைக்கவில்லை. எனவே, நறுமண (சென்ட்)தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட அருணாச்சலா சா்க்கரை ஆலை மற்றும் போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பென்ஞால் புயலின்போது, பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

காரப்பட்டு கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தக கட்டிடம் பழுதாகியுள்ளது. எனவே, அதனை சீரமைக்க வேண்டும். கோவூர் கால்நடை மருந்தகத்துக்கு டாக்டரை நியமிக்க வேண்டும், புதுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் தொழிலாளர்களாக உள்ளனர். எனவே, புதுப்பாளையம் வழியாக பெங்களூருக்கு பஸ் இயக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசன திட்டத்தில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. பயனாளிகள் தேர்விலும் பல்வேறு தவறுகள் நடந்துள்ளது. எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு சொட்டு நீர் பாசனம் கிைடக்க உத்தரவிட வேண்டும். உழவர் அட்டை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு, அரசு வழங்கும் திட்டங்கள் முறையாக கிடைக்கவில்லை. அரசு வழங்கிய இலவச பட்டாக்களை, அரசு கணக்கில் ஏற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கில் ஏற்றாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

நாயுடுமங்கலம் பகுதியில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விரைவில் திறக்க வேண்டும். என கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

இதையடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ரூ.77 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 578 மதிப்பிலான நிவாரணத் தொகை 1,09,752 விவசாயிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதேபோல், மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற நறுமண தொழிற்சாலை தொடங்குவதன் சாத்தியம் குறித்து ஆராயப்படும் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top