திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 போ், ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாமாக சாத்தனூா் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சிறப்புப் பேருந்து மூலம் சென்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் வழியனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் காா்க் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், திருவண்ணாமலை வனக்கோட்டம் இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், துர்கை நம்மியந்தல், சடையனோடை, கீழ்சிறுப்பாக்கம் , இனம்காரியந்தல் மற்றும் சாத்தனூர் சார்ந்த அரசு பள்ளிகளில் இருந்து 100 மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
மேலும் இம்முகாமில் மாணவர்கள் சாத்தனூர் அணையில் உள்ள முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை காண்பதோடு, இயற்கையோடு இணைந்த நடைபயணம் மேற்கொண்டனர். அங்கு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பாடங்களும், வனம் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கருத்துக்களும் கற்பிக்கப்பட்டன.
இம்முகாமில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழகிய துணிப்பை, உலோக தண்ணீர் குவளை, தொப்பி சுற்றுச்சூழல் சார்ந்த விளையாட்டுகள், வினாடி வினா, வார்த்தை புதிர்கள் உள்ளடங்கிய செயல்பாட்டு புத்தகம், பேனா, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன.