1 முதல் 6 வயதுடைய செவித்திறன் குறை உடைய 20 இளம் சிறார்கள் செல்லும் ஓருநாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உணவுப் பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஒன்று முதல் ஆறு வயது உடைய செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் அமைந்துள்ளது.
தற்போது 20 குழந்தைகள் ஆரம்பக் கல்வியினை கற்று வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அவர்களை ஒருநாள் இன்ப சுற்றுலா அழைத்து செல்லும் நிகழ்வு இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது .
இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்துகொண்டு சுற்றுலா செல்லும் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கி மகிழ்ச்சியுடன் சுற்றுலா கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்கள் கவனமுடன் குழந்தைகளை பார்த்துக் கொண்டு அவர்களை மகிழ்விக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இவர்கள் அனைவரும் ஒரு நாள் சுற்றுலா மாமல்லபுரம் கடற்கரை கோயில், கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட உள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்தில் பயணிக்கின்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.