திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
‘புன்னகை இளவரசி’
இந்நிலையில் ‘புன்னகை இளவரசி’ என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா, தனது கணவர் பிரசன்னாவுடன் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினார்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த அவர்கள் பிடாரி அம்மனை தரிசித்ததுடன் வில்வ மரத்தில் சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டார். 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவல பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், வாயு லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும், திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோயிலிலும் தரிசனம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி கிரிவலப் பாதையில் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.
இரவு நேரத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட திரைப்பிரபலங்களை கண்ட பக்தர்கள் அவர்களுடன் செல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன்
கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்ஐகே’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்து கொண்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன். பின்னர் அண்ணாமலையார் மற்றும் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.