Close
ஏப்ரல் 2, 2025 2:02 காலை

அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனத்திற்கு வெயிலில் நிற்கும் பக்தர்கள்..!

கோவிலுக்குள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுவதால்,  கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது, மேலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக அதிகாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாட்களைப் போல, வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரிக்கிறது. அதன்படி, வார இறுதி விடுமுறை தினமான சனி, ஞாயிறு மற்றும்  திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

வழக்கம் போல அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. ராஜகோபுரத்தையும் கடந்து வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரை தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் நிலையில், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாடவீதியில் பந்தல் அமைக்க கோரிக்கை

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனத்திற்கு ராஜகோபுரம் முன்புறமும் அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் ஏராளமான பக்தர்கள்,வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள்,  நீண்ட வரிசையில் கடுமையான வெயிலில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்பகுதியில் நிழல் பந்தல் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .மேலும் நிழல் பந்தலில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் பக்தர்களுக்கு சுட்டு எரிக்கும் வெயிலில் கோவிலுக்குள் நடந்து செல்வதற்கு பாதை விரிப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top