திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் வரும் 2030 ஆண்டிற்குள் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக, வாழ தகுதியற்ற நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்துப் பயன்பெறலாம். அரசின் அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் நன்கு அறிந்து பயன்பெற வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள நீா்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். நாம் தினமும் பயன்படுத்தும் நீரை தேவைக்கேற்ப சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படுவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது என்றாா்.
நலத் திட்ட உதவிகள்: கிராம சபைக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியுதவிக்கான காசோலைகள், ஒரு மகளிா் முதியோா் குழுவுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பில் முதியோா் குழு வாழ்வாதார நிதியுதவிக்கான காசோலை, மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் தனிநபா் கடன் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.
இதையடுத்து, ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் சோ்ந்து கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.
இதில், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி, தண்டராம்பட்டு வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.