தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அதிமுகவைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது என்று விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விசிக தோ்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.கட்சியின் மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது:
`திருவண்ணாமலை தீபமாய்’ என்று கேட்கும் அளவுக்கு சிறுத்தைகள் நடத்துகிற தீபத்திருவிழாவாக இந்த மகளிர் கொண்டாட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது. மேடை பின்புறத்தில் திருவண்ணாமலை மலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெறும் மலையாக இருந்தால், அது எந்த மலை என்றுத் தெரியாது.
எனவே, அண்ணாமலையார் கோபுரத்தையும் பக்கத்தில் வைக்கச் செய்தேன். பலருக்கும் வியப்பாக இருக்கலாம். `கடவுள் நம்பிக்கை இல்லாத திருமாவளவன் மலையைப் பின்புறமாக வைத்ததோடு மட்டுமில்லாமல், அண்ணாமலையார் திருக்கோயிலின் விண்ணுயர உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் வைத்திருக்கிறாரே, என்ன ஆனது திருமாவளவனுக்கு?’ என்று பகுத்தறிவாளர்களும் விமர்சிப்பார்கள். `சிவ பக்தர்களின் வாக்குகளுக்காக திருமாவளவன் இப்படி மேடை அமைத்திருக்கிறார்?’ என்று விமர்சிப்பார்கள். விமர்சனங்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
திமுக கூட்டணியை உடைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அதிமுகவைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது.
திருமாவளவன் `என்ன பெரிய சாதனையை சாதித்துவிட்டீர்கள்… வெற்றிவிழா கொண்டாடுகிறீர்கள்?’ என்று சிலருக்கு வயிற்றெரிச்சல். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்திய அளவில் அரசியல் களத்தை உற்றுநோக்குகிற அனைவரும் வி.சி.க-வை வியப்போடு பாராட்டுகிறார்கள். இது ஒரு மகத்தான சாதனை. வரலாற்றுச் சாதனை.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கிறாா்கள். 6 தொகுதி 10 தொகுதி ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. மாறாக, நாங்கள் இருக்கும் கூட்டணி தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்பதை வரும் தோ்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றாா்.
முன்னதாக, புத்தா், அம்பேத்கா், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் படங்களுக்கு தொல்.திருமாவளவன் மற்றும் விசிக மூத்த நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.