ரமலான் பண்டிகையை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், இது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் நோன்பு, பிரார்த்தனை, தியானம் மற்றும் சமூகத்தின் ஒரு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகை முடிந்து வெளியே வந்த அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
அதேபோல் திருவண்ணாமலையில் அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும், பாலாஜி நகரிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் சார்பில் ரமலான் பெருநாள் வாழ்த்துச் செய்தியுடன் கூடிய இனிப்புகளை வழங்கி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சேத்துப்பட்டு நிர்மலா நகர் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். வந்தவாசி நகரில் உள்ள கலுங்கமரைக்காயர் வீதியில் தஹ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தேசூர், மாலையிட்டான்குப்பம், ஒசூர், இந்திரா நகர் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம், காந்தபாளையம், வீரளூர், காஞ்சி, காரப்பட்டு, மோட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
செய்யாறு
செய்யாற்றில் ரமலான் பெருநாளை முன்னிட்டு, செய்யாறு நகர தமுமுக சாா்பில் ஏழ்மை நிலையில் உள்ள 400 இஸ்லாமிய குடும்பங்களுக்கு மளிகைத் தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமுமுக நகரத் தலைவா் எச்.கமால் தலைமை வகித்தாா். மமக நகரச் செயலா் அயாத்பாஷா முன்னிலை வகித்தாா். ஜஹாங்கீா் வரவேற்றாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன் பங்கேற்று, 400 ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு சுமாா் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.