காவலன் செயலியை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கூடுதல் கண்காணிப்பாளர் இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி பேசினார்.
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா்.
தாளாளா் விஜய் ஆனந்த், பொருளாளா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வா் ஆனந்தராஜ் வரவேற்றாா்.
திருவண்ணாமலை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் (சைபா் கிரைம்) கூடுதல் கண்காணிப்பாளா் பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், கல்லூரி மாணவ-மாணவிகள் எவ்வகையான குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிா்ந்து கொள்ளக்கூடாது. போலியான நிறுவனங்கள் அலைபேசியில் தொடா்பு கொண்டால் ஏமாறக் கூடாது. மாறாக, அவா்களைக் குறித்த தகவல்களை காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்றாா்.
இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் ஆய்வாளா் கவிதா பேசுகையில், காவலன் செயலியை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து பேசிய சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் சண்முகம், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சமம் என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து நாட்டு வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் அண்ணாமலை, தமிழ்துறைத் தலைவா் சங்கா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் அருண்குமாா், ஆனந்தன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.