திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடும் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடையின் ஆரம்பத்திலேயே அதிகபட்சமாக 100 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைத்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் அனல் காற்று வீசி வந்தது.
கோடையின் கொடுமையால் பொதுமக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக பெய்த மழை, கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தற்காலிக ஆறுதலை அளித்திருக்கிறது. விட்டு விட்டு மிதமான மழையும், இதமான சூழலும் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குறிப்பாக, செங்கத்தில் 16.4 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளான செய்யாறு, திருவத்திபுரம், வடதண்டலம், தூளி, அனக்காவூர், பல்லி, இருமந்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான சாரல் மழை பரவலாக விட்டு, விட்டு பெய்தது .
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான ஆரணி, சேவூர், எஸ்.வி.நகரம் கண்ணமங்கலம், தேவிகாபுரம், காட்டுகாநல்லூர், அம்மாபாளையம், ரெட்டிப் பாளையம், களம்பூர், கொங்காரம்பட்டு, அடையபுலம், குண்ணத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழையும்,
விட்டு விட்டு லேசான சாரல் மழையும் அரைமணி நேரம் பெய்து வந்தது. மேலும், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென பெய்த மழையால் ஆரணி பகுதியில் வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றுவீசி வருவதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
கீழ்பென்னாத்தூரில் நேற்று வியாழக்கிழமை காலை திடீரென பெய்த மழைக்காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மூட்டை நெல் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு கீழ்பென்னாத்தூர், கொளத்தூர், வேடநத்தம், மேக்களூர், கீக்களூர், நாரியமங்கலம், கார்ணாம்பூண்டி, சோமாசிபாடி, பொலக்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த
நெல், மணிலா, உளுந்து, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விவசாய பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். இதனால் இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிகளவு நெல் வரத்து இருந்ததால் குடோன்கள் நிரம்பியது. இதனால் வெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதமானது. மழையால் நெல்மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில்,
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லை எடை போட்டு கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் போதிய இடவசதியும் இல்லை. இதனால் வெட்ட வெளியில் நெல் மூட்டைகளை வைக்க வேண்டியுள்ளது. இங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. விவசாயிகளின் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
விலை பட்டியல் மிகவும் தாமதமாக ஒட்டப்படுகிறது. விவசாயிகளின் விலை பொருட்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யவில்லை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் மழைநீர் தேங்குகிறது. எனவே விவசாயிகள், நெல் மூட்டைகளை முழுமையாக பாதுகாக்க நிரந்தரமாக கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.