முக்தி தரும் நகரில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்றானது.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீராமானுஜருக்கு அடுத்தபடியான முக்கிய ஆச்சாரியாராக போற்றப்படுபவர் ஸ்ரீ வேதாந்த தேசிகன். இவர் அவதரித்த தலமான தூப்புல் கொண்டாடப்படுகிறது. வடகலையின் முக்கிய குருவாக வேதாந்த தேசிகர் விளங்கி வருகிறார்.
வைகாசி மாதத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு அனேக தினங்கள் இந்த சன்னதியில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு பரிவட்டம் மாலை மரியாதை செய்வது விசேஷம்.
அவ்வகையில் இத்திருக்கோவில் நூற்றாண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் கடந்த வருடம் துவங்கியது. பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி காலை மகா சம்ப்ரோஷண விழா வாஸ்து ஓமத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்வேறு யாக சாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை நாலு மணிக்கு பூர்ணாஹதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து விமான கோபுரம் மற்றும் மூலவர் சன்னதிக்கான புனித நீர் குடங்களுடன் திருக்கோயில் வளாகத்தை வலம் வந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் புனித நீர் ஊற்றி விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
அதன்பின் மூலவருக்கு புனித நீர் ஊற்றி அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். மகா கும்பாபிஷேக விழாவினை தக்கார் முத்துலட்சுமி செயல் அலுவலர் பூவழகி, பட்டாட்சாரியர்கள் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.