திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் பெரணமல்லூர் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுகூட்டம் நடைபெற்றது.
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரணமல்லூர், வந்தவாசி மற்றும் தெள்ளார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்யார், அனக்காவூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடுகட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் , முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததாரர்கள் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவும், ஊராட்சிகளில் குறைவாக வரி வசூல் செய்துள்ள அலுவலர்களை விரைந்து வரி வசூல் செய்யவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் வந்தவாசி, செய்யார் மற்றும் வெம்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்ந்த அலுவலர்களின் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் விவரம் மற்றும் அதன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேலும் பெறப்படும் மனுக்களை நிலுவையில் வைக்காமல் விரைந்து தீர்வு காணவும், பட்டா மாற்றம், சாதிசான்றிதழ், வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய ஆவணங்களுடன் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனுக்குடன் ஒப்புதல் அளித்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) இளங்கோ, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி திட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.