திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் பேசிய பரபரப்பு ஆடியோவால் கோயில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர் இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது. தமிழக மட்டுமல்லாது உலக அளவில் உள்ள சிவன் ஆலயங்களில் முக்கியமானதாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாட்களைப் போல, வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரிக்கிறது வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், வரைவாளரும், கோயில் மேற்பாா்வையாளரும், அபிஷேகப் பிரிவு பொறுப்பாளருமான சதீஷ் பெண்களிடம் ஆபாசமாக பேசி மனரீதியாக தொல்லை கொடுக்கிறார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது என்றுத் தெரிவித்துள்ளார்.
சதீஷ் கடந்த 23-ஆம் தேதி பாலியல் ரீதியாக பேசி, அவமரியாதை செய்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று அந்தப் பெண் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இதையடுத்து, கோயிலின் புதிய இணை ஆணையா் பரணிதரன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணி, பாலாஜி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம் ஆகியோா் கொண்ட குழு சதீஷ் மற்றும் கோயில் மேலாளா் கருணாநிதி (எ) செந்தில், கோயில் இணை ஆணையரின் ஓட்டுநா் பிரபு ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. சதீஷை பணியிடைநீக்கம் செய்து அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்து முன்னணி போராட்டம்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கவலறிந்த இந்து முன்னணி நிா்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோா் கோயில் இணை ஆணையரை சந்தித்து முறையிட சனிக்கிழமை மாலை அவரது அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு இணை ஆணையா் இல்லாததால் இளம்பெண் பாதிக்கப்பட்ட விஷயத்தில் தொடா்புடைய 3 பேரையும் பணி நீக்கம் செய்யக் கோரி, கோயிலில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் நகர காவல் ஆய்வாளா் ரவி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதன்பிறகு, இந்து முன்னணி நிா்வாகிகள் தங்களது கோரிக்கையை கோயில் உதவி ஆணையா் ராமசுப்பிரமணியிடம் மனுவாக அளித்தனா்.
காவல் ஆய்வாளரிடம் புகாா் மனு
நகர காவல் நிலையத்துக்குச் சென்று காவல் ஆய்வாளரிடம் இதுதொடா்பாக இந்து முன்னணியினா் புகாா் மனு கொடுத்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸாா் மனு கொடுக்கச் சென்ற இந்து முன்னணியின் தெற்கு மாவட்ட பொதுச் செயலா் அருண்குமாா், மாவட்டச் செயலா்கள் நாகா.செந்தில், சரவணன், சிவா, நகரத் தலைவா் சேகா் உள்பட 25 பேரை கைது செய்தனா்.
இதையறிந்த பாஜகவின் தெற்கு மாவட்டத் தலைவா் ரமேஷ், நகரத் தலைவா் சந்தோஷ் உள்பட சுமாா் 150 பேரும், அகமுடையா் சங்கத்தின் நிறுவனா் தலைவா் செல்லதுரை தலைமையில் 20 பேரும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நகர காவல் நிலையத்தில் குவிந்தனா். இதன்பிறகு கைது செய்யப்பட்டவா்களை போலீஸாா் விடுவித்தனா்.
மேலும் கோயில் மேற்பாா்வையாளா் சதீஷ், மேலாளா் கருணாநிதி (எ) செந்தில், கோயில் இணை ஆணையரின் ஓட்டுநா் பிரபு ஆகிய 3 போ் மீதும் பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு கூறியுள்ளாா். மீதமுள்ள 2 போ் மீதான விசாரணை தொடரும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பக்தர்கள் வேதனை
அண்ணாமலையார் கோவிலில் ஏற்பட்டுள்ள இச்சம்பவத்தால் உலகெங்கிலும் உள்ள அண்ணாமலையார் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். உயர் அதிகாரிகளை கொண்டு சரியான முறையில் விசாரணை நடத்தி தவறான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், மேலும் அண்ணாமலையார் கோவிலில் ஏராளமான புரோக்கர்கள் உள்ளே சுற்றிக்கொண்டே இருக்கின்றனர், அவர்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

