காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதுமே காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த முத்தம்மாள்(75) என்ற மூதாட்டியும் அவரது மகள் வனஜா (46)என்ற பெண்ணும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அப்போது திடீரென கீழே அமர்ந்து எங்களுக்கு சொந்தமான இடத்தை எங்களின் உறவினர் வெங்கடேசன் என்பவருக்கு எங்களுக்கே தெரியாமல் மாற்றி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டால் அவர் எங்களை அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
எனவே எங்களுக்கு சொந்தமான இடத்தை எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்று தாயும் மகளும் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் படுத்து, புரண்டு அழுதனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் காலில் விழுந்து அழும் காட்சிப் அனைவரையும் கண் கலங்க செய்தது. பின் போலீசார் பெண்கள் இருவரையும் சமாதானமாக பேசி சமூக நலத்துறை வட்டாட்சியர் அவரிடம் அழைத்துச் சென்றனர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.