காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் வேறு கிராமத்தில் சாலை ஓரம் வசிப்பவர்களுக்கு, செரப்பணஞ்சேரி கிராமத்தில் மனைகள் ஒதுக்கீடு மற்றும் மறுகுடியமர்வு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தும்,அவ் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரியும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட செரப்பணஞ்சேரி கிராம மக்கள் கூட்டாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
குறிப்பாக செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட, செரப்பணஞ்சேரி கிராமத்திலுள்ள கிராம நத்தத்தில் கரசங்கால் ஊராட்சிக்குட்பட்ட கரசங்கால், துண்டல்கழனி பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரம் வசிப்பவர்கள் சுமார் 40 நபர்களுக்கு மனைகள் ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அவர்களுக்கு துண்டல்கழனி கிராமத்திலுள்ள சமத்துவபுரத்தில், மிகுதியாக உள்ள சுமார் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அல்லது மின்சார வாரியம் அலுவலகம் எதிரே சுமார் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே மனைகளை ஒதுக்குமாறு செரப்பணஞ்சேரி கிராம மக்கள் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செரப்பணஞ்சேரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்போர், வீட்டு மனை இல்லாதோர் என பல பேர் இருப்பதனை கருத்தில் கொண்டு, மாற்றுகிராமத்தில் இருந்து,எங்கள் கிராமத்தில் மனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் , மறுகுடியமர்வு செய்வதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாக அக்கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.