ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடக்காட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஓடகாட்டு ஏரிநீர் மூலம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புலஎண் 233ல் ஓடகாட்டு ஏரிக்கு வரும் சுமார் 334 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உள்ள நீர்வரத்து கால்வாயை, கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து சிமென்ட் சாலை அமைத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் வரும் காலங்களில் ஓடகாட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து தடுக்கப்படும். இதனால் மேட்டுப்பாளையம் பகுதியில் முற்றிலும் விவசாய பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திலும் மனு அளித்தனர்.
ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிவேலு நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும், ஆய்வின் போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தால், நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிறுவனத்திற்கு உரிய முன்னறிவிப்பு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.