கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரிதாரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கல்பயிர் கிராமத்தில் ரூ 1.38 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சம்பத், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது,
நான் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த போது அரிதாரிமங்கலம் பகுதி மக்கள் என்னிடம் எங்கள் பகுதிக்கு புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டி என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் மூலம் ரூ 1.38 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் இப்போது புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த சாலையின் பணிகள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதன் மூலம் மக்கள் இந்த தார் சாலையில் சுலபமாக செல்லலாம் என்று சரவணன் எம்எல்ஏ கூறினார்.
நிகழ்ச்சியில் இன்ஜினியர் குமார், காஞ்சி கிளைச் செயலாளர் சங்கர், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.