Close
ஏப்ரல் 16, 2025 12:36 காலை

மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட கோரிக்கை

மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும், அவதூறு செய்தி பரப்பி தர்ப்பூசணி விவசாயிகளை நஷ்டத்திலிருந்து மீட்க அரசு ஏக்கருக்கு 70000 நஷ்ட ஈடு தர வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாய நில இயக்கம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள எடமிச்சி மற்றும் மாம்புதூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கல்குவாரி அனுமதி திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாலாறு மணி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் விவசாயிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி காப்பாற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கழிப்பதை தடுத்த நிறுத்துதல், விவசாயிகளை அழிக்கும் வகையில் செயல்படும் கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்தல் திரும்ப பெறுதல் உள்ளிட்டவை குறித்து கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர் .

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன் , உச்சநீதிமன்றம் நீர்நிலைகளை பாதுகாக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கக் கூறி இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

உடனடியாக அது குறித்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் எனவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரி விவசாயிகளின் விலை பொருள் என தர்பூசணி மீது அபாண்டமான பொய் காரணங்களை கூறியதின் விளைவாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பெருத்த நஷ்டம் கண்டுள்ளனர்.

எனவே அரசு தர்பூசணி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 70 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கல்குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது விவசாயிகளிடையே பெருத்த அதிர்ச்சியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top