தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சி தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களின் நலனுக்காக செய்த திட்டங்கள், சாதனைகள், நிதி நிலை அறிக்கை, இந்தித் திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுவரை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில்,
இந்தியாவிலியே அதிகமானோர் படிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டில் தான் 55 சதவிதமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தியாவிலே அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமும் தமிழ்நாடு தான். 42 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.
நான் முதல்வன் திட்டம், படித்து முடித்தவர்கள் திறனுக்கேற்ப பயிற்சிகளை அளித்து பயனடைய செய்யும் திட்டம். இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெரும் வகையில் திட்டம் உயர்த்தி இருக்கிறது.
உலகத்தின் சிறப்பான ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான் என அமைச்சர் சி.வெ.கணேசன் பெருமிதமாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,தலைமை கழக பேச்சாளர் தக்கோலம் தேவபாலன் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் சேகர், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.