Close
ஏப்ரல் 14, 2025 5:55 மணி

அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்

சிறப்பு அலங்காரத்தில் அருணாச்சலேஸ்வரர்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் அருணாச்சலேஸ்வரர் திருக்கல்யாணம் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் 11.04.2025 முதல் 16.04.2025 வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. விழாவையொட்டி கோவில் மூலவர் சன்னதியில் மதியம் 12 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் இரவு 8 மணியளவில் கோவில் கொடிமரம் முன்புறம் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவரும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர்.

இரவு சுமார் 11 மணிக்கு மேல் கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு தங்க ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் அருணாசலேஸ்வர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி நடைபெற்றது.

நாளை  இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், நாளை மறுநாள்  இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், செவ்வாய்க்கிழமை காலையில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

புதன்கிழமை பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக் குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள், கோவில் இணை ஆணையர், கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

காவடி

காலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் இருந்து காவடி எடுத்து வந்து மாட வீதியை சுற்றி வந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top