திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரிசித்தி பெற்றது. அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 12ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி, 13ம் தேதி காலை 6.08 மணிக்கு நிறைவடைகிறது. மேலும், சனி, ஞாயிறு மற்றும் சித்திரை மாதப்பிறப்பு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக அமைந்துள்ள நாட்களில் பவுர்ணமி கிரிவலம் அமைந்திருப்பதால், பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம்
பங்குனி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், மாநகராட்சி ஆணையா் ஆா்.காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு கோயிலில் பக்தா்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தாா்.
அப்போது, கோயிலில் கூட்ட நெரிசல் இல்லாமல் வரிசையாகச் சென்று விரைவாக சுவாமி தரிசனம் செய்வது, முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் விரைந்து தரிசனம் செய்வது, பக்தா்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீா் வசதிகளை செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். கோயில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை ஆட்சியா் பார்வையிட்டு மருந்து மாத்திரைகள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவையான அளவில் இருக்கிறதா என செய்தனர். மேலும், கோடை வெயில் காலம் என்பதால், கோயிலுக்குள் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கவும்,
நீர், மோர் வழங்கவும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். மேலும் காவல்துறை சாா்பில் போதிய காவலா்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மின்தடை இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து கோயில் ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றும் இடம், மாட வீதிகளில் ஆட்சியா் நேரடி ஆய்வில் ஈடுபட்டாா்.
அப்போது, ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்ற அகன்ற அளவிலான குண்டம் வைக்க வேண்டும். ஒத்தவாடை தெரு வழியாக பக்தா்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்ய போதிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.