திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக பொதுப்பணி நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றைய தினம் கலைஞரின் கனவு இல்லம் விட்டத்தின் வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
கலைஞரின் ஆட்சிக் காலத்தில் குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பினை உருவாக்கினார்.
நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த பொழுது 2009 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் குடிசை இல்லாத மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டு ,திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வீடுகள் கட்டுவதற்காக அதிகமான நிதியை எனது முயற்சியின் மூலம் பெற்று தந்தேன்.
மேலும் தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 2023-24 நிதி ஆண்டில் குடிசை இல்லாத மாநிலமாக உருவாக வேண்டும் என்று அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 8 லட்சம் வீடுகள் கண்டறியப்பட்டு வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ரூ.181 கோடி மதிப்பில் 5,090 வீடுகள் கட்டுவதற்காக ஆணைகள் இப்போது வழங்கப்படுகிறது. அரசுத்துறை அலுவலா்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வீடுகள் கட்டுவதற்கான இலக்கை விரைவாக அடைய வேண்டும். அரசு துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியுடன் பணியாற்றி வீடுகள் கட்டுவதற்கான இலக்கினை துரிதமாக அடைய வேண்டும் மேலும் பயனாளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்…
தொடா்ந்து நடைபெற்ற விழாவில், சமூக நலத்துறை சாா்பில் 116 பேருக்கு டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி, 115 பேருக்கு ஈ.வெ.ரா. மணியம்மை கலப்புத் திருமண நிதியுதவி, 145 பேருக்கு சத்தியவாணி அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்டு குரூப்-4 தோ்வில் தோ்வு செய்யப்பட்ட 17 தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணைகள், கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் 15 பேருக்கு கலைமுதுமணி, கலை நன்மணி, கலைச்சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் வடிவேலன், வேல்முருகன், உதவித் திட்ட அலுவலா் சஞ்சீவி குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.