Close
ஏப்ரல் 14, 2025 12:39 மணி

குரோதி ஆண்டின் கடைசி பௌர்ணமி குவிந்த பக்தர்கள்..!

கிரிவலம் செல்லும் பக்தர்கள்

பங்குனி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று  (ஏப்ரல் 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பௌர்ணமியை முன்னிட்டும் வார இறுதி நாளை முன்னிட்டும் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தரிசன வரிசையில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கடைசி பவுர்ணமி இதுதான். அடுத்த மாதம் வருவது சித்ரா பவுர்ணமியாகும். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.

சிறப்புப் பேருந்துகள்: கிரிவல பக்தா்களின் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top