Close
ஏப்ரல் 15, 2025 9:00 மணி

அருணாச்சலேஸ்வரர் கோயில் , ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு..!

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று விசுவாசுவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர்.

சித்திரை மாதம் 1-ம் நாளான இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பஞ்சாங்கம் வாசிப்பு

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதன்படி இன்று காலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, வருடம் முழுவதும் நல்லாட்சியை வேண்டி, அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளுக்கும், மனசா தேவி, குரு தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், செழுஞ்சுடர் விநாயகர்,ராகு கேது சன்னதிகள், உமா தேவியார்  மற்றும் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் அடக்கம் ஆகியுள்ள 27 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நீர் மோர், மற்றும் சிறப்பு அன்னதானம், இனிப்புகள், பழங்கள் வழங்கப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top