கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், ஒன்றிய செயலாளர் கேசவன், முன்னிலை வகித்தனர். குழந்தைவளர்ச்சி திட்ட அலுவலர் ஏஞ்சலினா, அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ வளைகாப்பு நிகழ்வை தொடங்கி வைத்து பேசியதாவது;

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தைபாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான மற்றும் சரிவிகித உணவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு மற்றும் கர்ப்ப காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள் காய்கறிகள் கீரை வகைகள் போன்றவை கண்காட்சியாக வைக்கப்பட்டது.
மேலும் துணை சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் எடை, உயரம் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் தனி கவனம் செலுத்தி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் வீட்டு சீதனமாக நமது முதல்வர் வளைகாப்பு விழா நடத்தி வருகிறார். மகப்பேறு காலத்தில் சத்தான உணவுகளை பெறவும் உடல் நலனில் அக்கறை செலுத்தவும் பராமரிப்பு உதவித்தொகையினைநமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்துடன் வழங்கி வருகிறார். மேலும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான குழந்தைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை பற்றியும் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து உதவி எண்ணாக 1098, 181, 1930 மற்றும் ஐசிஇ உபகரணங்கள் வழங்கப்பட்டது மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சட்டங்கள் திட்டங்கள் குறித்த விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என சரவணன் எம்எல்ஏ கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.