Close
ஏப்ரல் 19, 2025 9:22 காலை

குறைந்த விலை சிமெண்ட், பழைய நாணயங்கள் விற்பனையை நம்பி பணம் இழப்பு..!

பணத்தை மீட்டுத் தந்த சைபர் கிரைம் போலீசார்

குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்திருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டம் மேல் வில்வராணி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் முரளி  என்பவர் குறைந்த விலையில் சிமெண்ட் வாங்குவதற்காக Google-லில் தேடிய போது India Mart என்ற பக்கத்திற்கு சென்று முரளி தன்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.

பின்னர் மோசடிகாரர்கள் முரளியின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிமெண்ட் வாங்குவதற்கு முன்பணம் அனுப்புமாறு கேட்டதை நம்பி அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.40,000- அனுப்பினார்.  பின்னர் மீண்டும் அவர்கள் பணத்தை அனுப்புமாறு கூறியதால் முரளி சந்தேகம் அடைந்து சைபர் கிரைம் இணையதளம்  www.cybercrime.gov.in   -ல் புகார் அளித்தார்.

இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் வேல்முருகன் என்பவர் பழைய ரூபாய் நாணயங்களை விற்பதற்கான வீடியோவை   YouTube   -ல் சென்று தேடியுள்ளார்.

அதில் வந்த போலி விளம்பரத்தை நம்பி நாணயங்களை விற்பதற்காக அணுகிய போது முன்பணம் அனுப்புமாறு மோசடிகாரர்கள் கூறியதை நம்பி குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.60,000/-த்தை அனுப்பியுள்ளார். மீண்டும் அவர்கள் பணம் கேட்டு நச்சரித்ததால் சந்தேகம் அடைந்த வேல்முருகன் சைபர் கிரைம் தொலைபேசி எண் 1930 -ல் புகார் அளித்தார்.

இதை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட 2 பேரும் இழந்த ரூ.1 லட்சத்தை வங்கியின் உதவியுடன் மீட்டனர்.

இதனை தொடர்ந்து  இணைய வழியில் பணத்தை இழந்த நபர்களை நேரில் அழைத்து மீட்கப்பட்ட பணத்தை போலீசார் வழங்கினர்.

இதுபோன்ற போலியான இணையதளங்கள் மற்றும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், Whatsapp, Telegram மூலம் வரும் போலியான வங்கி செயலிகளை (APK Files) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் இணையதளமான   www.cybercrime.gov.in  மற்றும் சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண்ணான 1930 -ல் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top