திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 78 ஆயிரத்து 200 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கிப் பேசினாா்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக அவர்களின் நலனை காத்து உரிமையை நிலை நாட்டும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி வெளியில் செல்ல இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்டபெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார் .
தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக சேத்துப்பட்டு வட்டம் கெங்காபுரம் புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைத்தல் பணிக்காக ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் காசோலையினையும், ஒரு பயனாளிக்கு ரூபாய் 6700 மதிப்பிலான சலவை பெட்டியினையும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ,திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதரன், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, இளநிலை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சூா்யா உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.