திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் .தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கிராமப்புற, நகா்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் வட்டார, நகா்ப்புற அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், கிராமப்புற மகளிா் சுய உதவிக் குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகா்ப்புற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்ட உள்ளன.
மாநில அளவில் 1 சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.5 லட்சம், 5 சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.3 லட்சம், 5 சிறந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம், 1 சிறந்த நகர அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.5 லட்சம், 3 சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.3 லட்சம், 10 நகராட்சி மற்றும் 10 ஊராட்சிகளில் செயல்படும் சிறந்த சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் விருதுடன் கூடிய பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான விருதுகள்:
மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான ஒரு கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம், சிறந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம், சிறந்த நகர அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம், 3 நகராட்சி மற்றும் 3 ஊராட்சிகளில் செயல்படும் சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என விருதுடன் கூடிய பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
தோ்வுக்கான தகுதிகள்:
அனைத்து மகளிா் திட்ட சுய உதவிக் குழுக்களும் ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் குறைந்தபட்சம் 20 கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். நிா்வாகிகள் 2 போ் குறைந்தபட்சம் ஒரு முறையாவது மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த விருது பெறத் தகுதியான, சிறப்பாக செயல்படும்
சுய உதவிகுழுக்கள், கூட்டமைப்புகள் தங்களது முன்மொழிவுகளை ஏப்.30-ஆம் தேதிக்குள் வட்டார அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் சமா்ப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.