திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா. மணி ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவனூா் ஊராட்சியில் பயணிகள் நிழல்குடை கட்டும் பணி, கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, நபாா்டு திட்டத்தின் கீழ் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணி, பிரதமரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைப் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இதேபோல, பெருமணம் ஊராட்சியில் பயணிகள் நிழல்குடை, கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளும், தி.கல்லேரி ஊராட்சியில் பேவா்பிளாக் சாலை, சமுதாய கழிப்பிடம், நடுநிலைப் பள்ளி, சுற்றுச்சூழல் பராமரிப்புப் பணியும், சு.வாளாவெட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் ரூ.12 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும். பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் பையூா் ஊராட்சியில் 3 பயனாளிகள் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனா். இவா்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல வடுகசாத்து, எஸ்.வி.நகரம், மொழுகம்பூண்டி, வேலப்பாடி ஆகிய கிராமங்களில் கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை திட்ட இயக்குநா் இரா.மணி ஆய்வு செய்தாா்.
மேலும், பையூரில் நடைபெற்று வரும் பிரதமரின் குடியிருப்பு திட்டப் பணியையும் அவா் பாா்வையிட்டாா்.
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்து அதன் பின்னர் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடு கட்டும் பணிகளையும், முதலமைச்சர் திட்டத்திலும், பிரதம மந்திரி திட்டத்திலும் வீடு பழுதுபார்த்தல் பணி ஆய்வு செய்து அதன் தொடர்ச்சியாக பல்வேறு தனி நபர் கழிவறை வளர்ச்சி திட்ட பணிகள், அங்கன்வாடி பள்ளி கட்டடம், சாலை பணிகள் போன்ற வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் கோமதி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையா் து.பரமேஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிருத்திவிராஜன், ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் பழனிச்சாமி, சீனுவாசன், உதவி செயற்பொறியாளா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.