Close
ஏப்ரல் 24, 2025 12:14 மணி

கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.

இத்திருக்கோயிலுக்கு சுமார் 1 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புராண காலத்தில் கோராசுரன் எனும் அசுரன் முனிவர்களுக்கும் அரசர்களுக்கும் பெரும் துன்பத்தைக் கொடுத்து வந்தான். முனிவர்களின் வேண்டுதல்படி அசுரனைச் சிவபெருமான் அழித்து வீரட்டகாசமாய் இந்த தலத்தில் காட்சியளித்தார். அதனால் இங்குள்ள சிவபெருமானுக்கு வீரட்டீஸ்வரர் என்று பெயர் வழங்கப்படுகிறது.

சந்திரன் தட்சனின் இருபத்தியேழு மகள்களைத் திருமணம் செய்துகொண்டான். அவர்களில் ரோகிணி என்பவளின் மீது மட்டும் அதிக அன்பு செலுத்தியதால் தட்சனின் சாபத்திற்கு ஆளாகினான்.

பின்னர் சாப விமோசனம் வேண்டி சந்திரன் இத்தலத்திற்கு வந்து வீரட்டீஸ்வரரை வணங்கி சாபம் நீங்கினான். அதனால் இத்தலம் சந்திரன் பரிகாரத் தலமாக உள்ளது.

இங்கு வந்து வேண்டினால் மனசஞ்சலங்கள் நீங்கும் என்பதும் பயம் நீங்கி மன தைரியம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.

இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனார் சதய நட்சத்திர குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 12 ஆண்டுகளாக உற்சவம் நடைபெறவில்லை. பிப்ரவரி 10 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததால் இந்த ஆண்டு அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயில் முழுதும் வண்ண மின்விளக்குகளாலும் மலர்மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

காலை 6 மணிக்கு மூலவர் வீரட்டீசருக்கும் சாந்தநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

7 மணிக்கு பன்னிரு திருமுறைகள் யானைமீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அதன்பிறகு திருநாவுக்கரசு நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அருகிலிருக்கும் சுந்தர விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளினார்.

காலை 10 மணிக்கு வீரட்டீசர் ஆலயத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பிற்பகல் 4 மணிக்கு சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் திருநாவுக்கரசு நாயனாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் விசேஷ அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.

சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து புஷ்ப பல்லக்கு புறப்பட்டு சந்நிதி வீதிகளில் வீதி உலா நடைபெற்று வீரட்டீசர் ஆலயத்தை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசு நாயனார் வீரட்டீசர் சந்நிதிக்கு எழுந்தருளினார். நாயனாருக்கும் வீரட்டீசருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அப்பர் சுவாமிகள் சிவபெருமானுக்குள் ஐக்கியமாகும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஹரஹர என்று கோஷமிட்டு பெருமானை வணங்கினர்.

பின்னர் இரவு 11 மணிக்கு திருநாவுக்கரசு நாயனாருக்குப் பலவித மலர் மாலைகளால் விமரிசையாக அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் வண்ண வாண வேடிக்கைகளுடன் வீதி உலா நடைபெற்றது. சுவாமி வீதி உலாவிற்கு முன்பாக பலவித கலைஞர்கள் கரகாட்டம், மயிலாட்டம் ஆடிச் சென்றனர்.

இந்த உற்சவத்தை முன்னிட்டு சந்நிதி தெருவில் அமைக்கப்பட்ட அப்பர் சுவாமிகள் அரங்கில் திருநாவுக்கரசு சுவாமிகளின் வரலாற்று சொற்பொழிவும் திருமுறை இன்னிசையும் பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றன.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட கவுன்சிலர் அமுதா செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் மற்றும் படப்பை, செரப்பணஞ்சேரி, மணிமங்கலம், கரசங்கால், ஒரத்தூர், மாகாண்யம், வஞ்சுவாஞ்சேரி, வல்லக்கோட்டை, தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

உற்சவ ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் குருநாதன், அறங்காவலர்கள் கெஜலட்சுமி, .ஏழுமலை மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் விமரிசையாகச் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top