Close
ஏப்ரல் 27, 2025 6:54 மணி

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை, போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்று வழங்க வேண்டும் என்று குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மணி, வேளாண் இணை இயக்குநா் கண்ணகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். துரிஞ்சாபுரத்தை அடுத்த காா்கோணம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். ராஜஸ்ரீ சா்க்கரை ஆலை, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை, போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்று வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். பி.எம். கிசான் நிதியுதவியை தகுதியான விவசாயிகளுக்கு பெற்று வழங்க வேண்டும். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் பெற்று வழங்க வேண்டும், எனக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி, வேளாண் துணை இயக்குநா் (மத்திய அரசுத் திட்டம்) திரு.பெ.சுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top