Close
ஏப்ரல் 29, 2025 2:54 காலை

அண்ணாமலையார் கோயிலில் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

வெயிலில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கொளுத்தும் வெயிலில்  சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக நேற்றும்,நேற்று முன்தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்தனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.

நேற்று அதிகாலை கோயிலில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். படிப்படியாக காலை 11 மணியளவில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பொது தரிசன வரிசை மற்றும் 50 கட்டண தரிசன வரிசையில், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

வழக்கம் போல சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. ராஜகோபுரம் அடுத்த திட்டி வாசல் வழியாக பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டது. 50 கட்டண தரிசனம் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது.

மேலும், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் பலரும் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், நேற்று கிரிவல பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருந்தது.

சுட்டெரிக்கும் வெயிலில்

சுட்டெரிக்கும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் வயதானவர்கள் கைக்குழந்தைகளுடன்  நீண்ட நேரமாக கொளுத்தும் வெயிலில்  காத்திருந்து  தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வரிசையில் இருந்த இடங்களில் தரை விரிப்புகள் போடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டதால் வரிசையில் இருந்த பக்தர்கள் சற்று வெப்பம் தணிந்து  தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நீர்மோர்,குடிநீர் வழங்கப்பட்டது.

கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் இனிவரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top