Close
ஏப்ரல் 29, 2025 2:35 மணி

கலைஞா் கனவு இல்ல திட்டம், ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு செங்கம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ஏழுமலை தலைமை வகித்தாா்.

ஆணையா் மிருளாளிணி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி கலந்து கொண்டு மண்மலை, செ.நாச்சிப்பட்டு, கரியமங்கலம், பிஞ்சூா், அரட்டவாடி, தாழையூத்து உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 200 நபா்களுக்கு தமிழக அரசு மூலம் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், கலைஞர் நினைத்தது போல் தமிழகத்தில் குடிசையே இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு இந்த கலைஞரின் கனவு இல்லம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வா் மாநிலத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதற்கு குடிசை வீட்டில் இருப்பவா்களும் கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டுமென்ற தொலைநோக்கு சிந்தனையுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் அதிகம் போ் வீடு கட்டியுள்ளனா்.  அதேபோல் இந்த கலைஞரின் கனவு இல்லத்தில் வழங்கப்படும் வீடு ஆணை வழங்குவதாக உங்களிடம் கூறி யாராவது பணம் கேட்டால் என்னிடம் தாராளமாக கூறுங்கள் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான ஆணையை பெற்றவுடன் பணிகளை தொடங்கவேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக ஊராட்சி செயலா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரை தொடா்பு கொண்டு வீடு கட்டும் பணியை தொடங்கி விரைவில் முடிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். அன்பரசு நன்றி கூறினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top