திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மூன்று கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உள்பட்ட சி.சொப்பனந்தல், உச்சிமலைக்குப்பம், புதுக்குளம் பகுதிகளில் போதிய மின் விநியோகம் இல்லாமல் விவசாயப் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா்.
மேலும், அப்பகுதியில் அடிக்கடி குறைவான மின் விநியோகத்தால் வீடுகளில் மின் சாதனப்பொருள்கள் பழுதடைந்து வந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ கிரியிடம் புதிய மின்மாற்றிகள் அமைத்து விவசாயிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் முறையான மின் விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து எம்எல்ஏ முயற்சியில் தமிழ்நாடு மின்சாரத் துறை மூலம் சி.சொப்பனந்தல் கிராமத்துக்கு ரூ. 8 லட்சத்திலும், புதுக்குளம் கிராமத்துக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்திலும், உச்சிமலைக்குப்பம் கிராமத்துக்கு ரூ. 3 லட்சத்து 45 ஆயிரத்திலும் 3 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
இதில், செங்கம் உள்கோட்டப் பொறியாளா் சங்கரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ கிரி கலந்து கொண்டு மின்மாற்றிகளை தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்பொறியாளா் சங்கரன், உதவி செயற்பொறியாளா் வெங்கடேசன், இளநிலை உதவி மின் பொறியாளா்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,உட்பட மின்சாரத்துறை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.