Close
மே 14, 2025 12:24 மணி

கிரிவலப் பாதையில் குப்பைகள் அகற்றம் : களத்தில் இறங்கிய ஆட்சியர்..!

தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்டு 260 டன் குப்பைகளை அகற்றினர். தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் களத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை கூறினார்.

சித்திரை மாத பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா். 4 நாட்களும் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை நாளில் சித்ரா பவுர்ணமி அமைந்ததால், பக்தர்கள் வருகை இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்தது.

இந்நிலையில், கிரிவலம் பக்தர்கள் கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருந்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அதோடு, மக்கும் தன்மையில்லாத, சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், கிரிவலப்பாதையில் குப்பை கழிவுகளும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என டன் கணக்கில் கடந்த இரண்டு நாட்களில் குவிந்தன. மேலும், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாக்குமட்டை தட்டுகள், இலைகள், குடிநீர் பாட்டில்கள், காகித டம்ளர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தன.

குப்பைகளை அகற்றும் பணி

இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 1200 தூய்மைப்பணியாளர்கள், கிரிவலப்பாதை தூய்மைப்பணியில் நேற்று முழு வீச்சில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட குப்பை கழிவுகள் டிராக்டர்கள், மினி லாரிகளில் குப்பை கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

100 டிகிரியை கடந்து சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் களப்பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினர்.

கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளா்ச்சித் துறைகளில் பணிபுரியும் 1,200 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

இப்போது வரை 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டு உள்ளது. உள்ளூா் மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா்  இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா்  மோகன்ராம் மற்றும் அரசுத்துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top