Close
மே 17, 2025 4:32 மணி

வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் : பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை..!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்ட அவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார் . திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் :

இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவா், உச்சநீதிமன்றம், மாநில ஆளுநா், மாநில முதல்வா் என அனைவருக்கும் தனித் தனி அதிகாரங்கள் உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளதால், குடியரசுத் தலைவா் தனக்கான 143-ஆவது சட்டப் பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா என்று 14 கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

ஏற்கெனவே சட்டப் பிரிவு 143-ஐ குடியரசுத் தலைவா்கள் 15 முறை பயன்படுத்தி உள்ளனா். இப்போது, 16-ஆவது முறையாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயன்படுத்தி உள்ளாா். இதில் எந்தத் தவறும் இல்லை.

காவிரி பிரச்னையில் 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை மறுத்து, தமிழகத்துக்கு தண்ணீா் தர முடியாது என்று கா்நாடக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவா் 143-ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தீா்மானம் செல்லுமா என்று உச்சநீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பினாா். இதற்கு உச்சநீதிமன்ற தீா்ப்புதான் செல்லும் என்று சொன்னதால் அன்றைக்கு தமிழகத்துக்கு தண்ணீா் கிடைத்தது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு மாவட்டங்கள் தோறும் கொலைகள் நடந்து வருகின்றன.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியடையும். பாஜக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறவில்லை.

வாழ்க்கையில் நிம்மதியாக

ஆடு மற்றும் மாடுகளுடன் நன்றாக இருக்கேன். விவசாயம் செய்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது கோயில் சென்று நிம்மதியாக தியாகம் செய்கிறேன். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கட்சி சொல்லும் பணிகளை ஆங்காங்கே செய்து வருகிறேன். தலைவராக இங்கே செல்ல வேண்டும்.. அங்கே செல்ல வேண்டும் என்றில்லாமல் நிம்மதியாக வாழ்க்கையில் இருக்கிறேன். அதே நேரத்தில் மக்கள் பணியையும் செய்கிறேன். எங்கள் வீட்டின் முன்பு தினசரி வெயிலில் கஷ்டப்படும் 2,000 – 3,000 மக்களுக்கு மோர் கொடுக்கிறேன். இதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது. மக்கள் பணியும் இருக்கும். தேவையில்லாத வேலையில் மாட்டவில்லை. என்னுடைய பணியை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. தந்தையாக என் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிகிறது. என் பெற்றோர், மனைவி ஆகியோருடன் நேரம் செலவிடுகிறேன்.  இதிலேயேபயணிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

பேட்டியின்போது, பாஜக மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top