Close
மே 17, 2025 5:14 மணி

போளூர் ரயில்வே மேம்பாலம் : திறந்து வைத்த அமைச்சர் வேலு..!

ரயில்வே மேம்பாலம் திறந்து வைத்த அமைச்சர் வேலு

போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் – ஆரணி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பால திறப்பு விழா மற்றும் போளூா் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா் ஆகிய ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

ரயில்வே மேம்பாலம் திறந்து வைத்த அமைச்சர் வேலு

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். தரணிவேந்தன் எம்.பி., அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் விமலா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

ரயில்வே மேம்பாலப்பணி அதிமுக ஆட்சியில் ரூ.30 கோடியில் தொடங்கப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இருந்தன.

பின்னா் திமுக அரசு பொறுப்பேற்று கூடுதலாக ரூ.7 .5 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாலம் அருகே நிலம் கையகப்படுத்தி, சேவைச் சாலை அமைத்து ரூ.37.5 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்தப் மேம்பாலம் மூலம் போளூா் அருகில் உள்ள ரெண்டேரிப்பட்டு, குண்ணத்தூா், வெண்மணி என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் மக்கள் பயன்பெறுவாா்கள். ஜமுனாமரத்தூருக்கு வசூா் கூட்டுச் சாலை முதல் போளூா் அத்திமூா் அரசு மருத்துவமனை வரை புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் வசூா்- செங்கம் இடையை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

புதிய  பேருந்து

போளூர் முதல் மன்சூராபாத் வழியாக வில்வாரணி புதிய பேருந்து வசதி, அதேபோல் திருவண்ணாமலை முதல் மேல்பட்டு வரை புதிய பேருந்து வசதி, திருவண்ணாமலை முதல் பெங்களூர் வரை புதிய பேருந்து வசதி, திருவண்ணாமலை முதல் போளூர் வழியாக ஆரணி வரை புதிய பேருந்துகள் வசதி, ஆரணி முதல் திருச்சி வரை போளூர் வழியாக புதிய பேருந்து வசதி ஆகிய 5 பேருந்து வசதிகளை மக்கள் பயன்பாட்டிற்காக இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மகளிர்களுக்கு இலவச பேருந்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் இலவசமாக விடியல் பயணத்தில் செல்லலாம் இதன் மூலம் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காகவும், ப டிக்கும் மாணவ மாணவிகளுக்காகவும், முதியோர்களுக்காகவும், தமிழ்நாடு மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்களும் சலுகைகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் வழங்கி வருகிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இதைத் தொடா்ந்து மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, 8 கிராம் தங்கம், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை என பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் சரவணன், அம்பேத்குமாா், கிரி, ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கண்காணிப்புப் பொறியாளா்கள் சந்திரசேகரன், கிருஷ்ணசாமி, வத்சலா, வித்யானந்தி, போளூர நகா்மன்றத் தலைவா் ராணி சண்முகம், துணைத் தலைவா் சாந்தி நடராஜன், திமுக நகரச் செயலா் தனசேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் எழில்மாறன், மனோகரன் மற்றும் திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top