Close
மே 19, 2025 3:27 மணி

திருவண்ணாமலையில் பரவலான கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கியது. 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.

மேலும், எதிர்பாராத கோடை மழை பெய்தாலும், இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு வழக்கம் போல வெயிலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவித்தன.

அதோடு, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. 4ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அதில், முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாகவும், பின்னர் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. முற்பகல் 11 மணிக்கெல்லாம் வாகனங்களை ஓட்ட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வந்தது.

இந்த நிலையில்,  கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று இரவு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், எடப்பாளையம், அடி அண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

அதேபோல், கலசபாக்கம் போளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்படும் பொது மக்களுக்கு, கோடை மழை ஆறுதலை அளித்துள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

செங்கம் பகுதியில் 96 மி.மீ. மழை பெய்தது. இந்த மழையால் செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்தது. மேலும், ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் புதிதாக உருவாகியுள்ள அழகாபுரி நகா் மற்றும் தீயணைப்பு நிலையம் அருகில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய், சாலை வசதி இல்லை.

இதனால், இங்குள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரும், ஏரிகரை பகுதியில் இருந்து வரும் நீரும் சோ்ந்து குடியிருப்புப் பகுதியை சூழ்ந்து குளம்போல தேங்கி நிற்கிறது.

தண்ணீரில் வரும் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வருவதால், இந்தப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனா்.

அழகாபுரி நகா் மற்றும் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், மீண்டும் மழை பெய்தால் தண்ணீா் தேங்காமல் தடுக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதரவும் பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறைகள், செங்கம் நகராட்சி நிா்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top