Close
மே 21, 2025 6:52 மணி

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பெரியஅய்யம்பாளையம் மலையடிவாரத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சாா்பில் ரூ.6 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில்  பேரூராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மேற்கொள்ள முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பணிகளை நிறுத்தக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார், செயல் அலுவலர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சென்று அவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து செயல் அலுவலா் முனுசாமி விளக்கம் அளித்துப் பேசியது:

இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைவதால் நிலத்தடி நீரோ அல்லது சுற்றுச்சூழலோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது.

இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

மேலும், போளூா், சேத்துப்பட்டு, வேட்டவலம் பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணா்வு விடியோவை நம் மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே வெளியிட்டுள்ளாா்.எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பொதுமக்களை சமாதானம் செய்து பேசினாா்.  அதில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைவதால் நிலத்தடி நீரோ அல்லது சுற்றுச்சூழலோ எந்தவிதத்திலும் பாதிக்காது. இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. போளூர், சேத்பட்டு, வேட்டவலம் பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறினர்.  இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top