Close
மே 22, 2025 3:57 மணி

சாத்தனூர் அணையில் ஆட்சியர் ஆய்வு..!

சாத்தனூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் கொள்ளளவு மற்றும் நீர்வரத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அணையின் நீா்வரத்து மற்றும் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அணையின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீா், கோரையாறு மற்றும் கல்லாறு மூலம் வரப்பெறும் நீா் என மொத்தம் சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் தற்போதைய நீா்மட்டம் 91.45 அடியாக உள்ளது. நீா் கொள்ளளவு 2 ஆயிரத்து 619 மில்லியன் கன அடியாக உள்ளது. சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்தக் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி.

அணையின் நீா்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவனமாக கண்காணித்து வருகிறாா்கள். தேவையானபோது தண்ணீா் திறப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றாா்.

ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் ராஜாராமன், உதவிப் பொறியாளா் சந்தோஷ், தண்டராம்பட்டு வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top