கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை புரிந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் வருகை புரிந்து அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக தினமும் ஆயிரக்கணக்கான பகல் இரவு என்று எந்நேரமும் பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
கிரிவலப்பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாமியார்கள் அங்கேயே யாசகம் பெற்று வசித்து வருகிறார்கள்.கிரிவலப் பாதையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இங்கு வந்து சாமியார் என்று வேடம் அணிந்து போலியாக உள்ள சாமியார்களின் வருகை தற்போது அதிகரித்து வருவதாகவும், இந்த போலி சாமியார்கள் கிரிவலப் பாதையிலேயே படுத்து உறங்குவதும் எப்போதும் கஞ்சா போதையில் இருப்பதும், இரவு நேரத்தில் கிரிவலம் வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதுமாக உள்ளனர்
எனவே இவர்கள் மீது மாவட்ட காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். காவல்துறையினரும் அவ்வப்போது தொடர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் பகுதியில் ஆந்திர மாநில பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலை மோட்ச துவாரம் என்று அழைக்கும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கியூ வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவிலை தரிசனம் செய்து வந்தனர்.
அப்போது போதை போலி சாமியார் ஒருவர் முகம் முழுக்க விபூதி பூசிக்கொண்டு கையில் விபூதி வைத்து இடுக்கு பிள்ளையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களை குறி வைத்து தானாக முன்வந்து அவர்களுடைய நெற்றியில் பணம் பறிக்கும் நோக்கில் விபூதியை பூசி தகாத வார்த்தைகளில் தெலுங்கில் பேசி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரிடம் சில்லரை தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சில்லறை தராமல் தப்பிக்க முயற்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர் போதை சாமியாரிடம் சில்லறை கேட்ட பொழுது நான் தங்களிடம் பணமே வாங்கவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதன் பெயரில் பணத்தை திரும்ப ஒப்படைத்தார்.
கிரிவலப் பாதையில் நகர காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம் என 3 காவல் நிலையங்கள் உள்ள நிலையில் கிரிவலப் பாதை முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா இருக்கின்ற போதும் 24 மணி நேரமும் இரு சக்கர வாகனத்தில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்ட நிலையில் இது போன்று ஒரு சில சாமியார்களின் செயல் கிரிவலம் செல்லும் பக்தர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
ஆன்மீக பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி கிரிவலம் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற போலி சாமியார்களை கண்டறிந்து கைது செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில் , கிரிவலப் பாதையில் யாராவது சாமியார்கள் தகராறு ஈடுபட்டால் உடனடியாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அல்லது கிராமிய காவல் நிலையத்திற்கு அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கோ அல்லது 100 ஐ டயல் செய்யலாம். என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.