தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர் சாரல் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
நேற்று இரவு முதலே தொடர் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலை முதலே குளிக்க தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மீண்டும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி வர தொடங்கியுள்ளனர். இதனால் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலைகளிலும்,குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாகக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.