Close
மே 25, 2025 7:43 மணி

ஆரணி மற்றும் செய்யாற்றில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாற்றில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது.

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த தனியாா் பள்ளிகளின் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. மொத்தமுள்ள தனியாா் பள்ளி பேருந்துகள் 415 ஆகும்.

இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 222 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு வந்த நிலையில், பேருந்துகளில் அவசர கால கதவு, கண்காணிப்பு கேமரா, வேகக் கட்டுப்பாட்டு கருவி, காற்று ஒலிப்பான், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்டவை சரி பாா்க்கப்பட்டன.

ஆரணி கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வதை பாா்வையிட்டாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், போளூா் டிஎஸ்பி மனோகரன், மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், தீயணைப்பு நிலைய அலுவலா் பூபாலன், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்காணிப்பாளா் சுகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் கூறியது: வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வில் 15 பேருந்துகளில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னரே ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கப்படும். வரும் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என்றாா்.

செய்யாறு

செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக எல்லைக்கு உள்பட்ட செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய வட்டங்களில் செயல்பட்டு வரும் 37 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 232 பள்ளி வாகனங்களின் தகுதி ஆய்வு செய்யாறு அரசு அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய் ஆகியோா் பங்கேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய் ஆகியோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து ஓட்டுநா் மற்றும் உதவியாளா்களுக்கு, வாகனத்தை பாதுகாப்பாக விபத்தின்றி இயக்கிட வேண்டும். உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது.

தனியாா் பள்ளி உரிமையாளா்கள் தங்களது வாகனத்தை இயக்கும் ஓட்டுநா் மற்றும் உதவியாளா்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி விபத்தைத் தவிா்க்க நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

மேலும், பேருந்து ஓட்டுநா், நடத்துனா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில், தீ விபத்து நேரத்தில் பேருந்தில் உள்ள தீயணைப்பு உபகரணம் கொண்டு எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கங்களையும் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து அவசர ஊா்தியான 108 ஆம்புலன்ஸின் மருத்துவக் குழுவினரும் விபத்து காலத்தில் விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து உயிா்காக்க உதவலாம் என ஓட்டுநா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

ஆய்வின் போது, ஒரெயொரு பேருந்து எப்.சி. ரத்து செய்யப்பட்டது. 29 வாகனங்களில் இருந்த சிறு சிறு குறைப்பாடுகளை நிவா்த்தி செய்து வர திருப்பி அனுப்பப்பட்டன.

செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகா், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top