Close
மே 29, 2025 1:02 மணி

வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு மகா அபிஷேகம்

அண்ணாமலையார்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதனடிப்படையில் வைகாசி அமாவாசை தினமான நேற்று 2ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவ மூர்த்திகளான அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு பிரம்மாண்டமாக மகா அபிஷேகம் நடைபெற்றது.

அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் 500 லிட்டர் பால், சாத்துக்குடி, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழச்சாறு வகைகள் ஆகியவற்றைக் கொண்டு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சுமார் 20 வகை பூக்கள் கொண்டு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித கலசத்தில் உள்ள நீரை மூலவரான அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் , உற்சவ மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 2ஆம் பிரகாரத்தில் சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான மூலிகைகளைக் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்று தொடர்ந்து பூர்ணாஹூதியும் விமரிசையாக நடைபெற்றது.

1008 கலச பூஜை

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1008 கலச பூஜை நேற்று நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் அதிகரித்தது. கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்தில் 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும், அடுத்தடுத்து பெய்த கோடை மழையால், படிப்படியாக வெயிலின் தாக்கம் தணிந்தது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.

அதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்படுகிறது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளையுடன் (28ம் தேதி) நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில் முதல் காலம் 1008 கலச பூஜை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, இன்று காலை 8.30 மணிக்கு 2வது கால கலச பூஜையும், மாலை 6.30 மணிக்கு 3வது கால கலச பூஜையும், நாளை காலை 7 மணிக்கு 4வது கால கலசபூஜையும் நடைபெறும்.

பின்னர், பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜையில் அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர நிறைவாக, நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும்.

1008 கலச பூஜை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top