உசிலம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும் விநோத நேர்த்திக்கடன் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில்.
இக் கோவிலின் வைகாசி உற்சவ திருவிழா நேற்று 26 ஆம் தேதி துவங்கி வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்து வரும் நிகழ்வு இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கரகம் உருவேற்றி கோவில் பூசாரி தலையில் சுமந்து வர ஏராளமான பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை வெட்டியவாறு அம்மன் கரகத்தை அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்புரம் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓம் சக்தி, பராசக்தி மற்றும் வா தாயே வா என்ற கோசங்களுடன் அம்மன் கரகத்தை அழைத்து வந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வில் ,இக் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.