Close
ஜூன் 12, 2025 9:37 மணி

அண்ணாமலையார் கோவிலில் முட்டை பிரியாணி சாப்பிட்டதற்கு பிராயசித்த பூஜை

புனித நீர் தெளித்து, பிராயசித்த பூஜை செய்த சிவாச்சாரியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், அசைவ உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் போக்க, கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் கருவறையின் எதிரிலுள்ள சூரிய பகவானுக்கு, புனித கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தபன பூஜை செய்யப்பட்டது..

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூதங்களில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் அவரது மனைவி ஆகிய இருவரும் பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்திற்கு உள்ளே வந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  இதனால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிலர் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவர்களை தடுத்து விசாரணைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரிகார பூஜை

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து  மூலவர் கருவறையின் எதிரிலுள்ள சூரிய பகவானுக்கு, புனித கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தபன பூஜை செய்யப்பட்டது.

பின், புனித நீர் கொண்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலின் ராஜகோபுரம், பெரிய நந்தி என கோவில் வளாகத்திலுள்ள அனைத்து சன்னிதிகளிலும் புனித நீர் தெளித்து, பிராயசித்த பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தம்பதியினர் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து அசைவ உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top