புதுக்கோட்டை விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் 1781 ஆம் ஆண்டு பயணிகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெயரில் கட்டிய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கருப்பட்டிபட்டி ஊராட்சி மன்றம் ஆயிப்பட்டி கிராம எல்லையில் சாலை ஓரமாக இடிந்த நிலையிலுள்ள தொண்டைமான் காலத்தைய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல வழித்தடங்களில் சத்திரங்களை ஏற்படுத்தியவர் என்ற புகழுடைய மன்னர் விசய ரெகுநாத தொண்டைமானாவார். கல்லாக்கோட்டை , மற்றும் அம்புக்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கான முக்கிய சாலையாக ஆயிப்பட்டி சாலை இருந்துள்ளதையும், அதன் காரணமாகவே மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இவ்வழியில் சத்திரம் கட்டியுள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
கல்வெட்டுச்செய்தி
விசய ரெகுநாத தொண்டைமான் தர்ம நோக்கோடு வழிப் போக்கர்கள், கால்நடைகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் பெயரில் இச்சத்தி ரத்தை கட்டியுள்ள செய்தியை “ஸ்ரீ பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் அவர்கள் சத்திரம்” என்ற கல்வெட்டு கிழக்கு வாயிற் நிலைத்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டிற்கு எதிரேயுள்ள மேற்குப்புற வாயிற் நிலைத் தூணில் “ சாற்வரி வருஷம் தயி (தை) மீ (மாதம்) 13 ல் ஸ்ரீ விசைய ரெகுனாதத்தொண்டைமானாராவர்கள் தற்மம் “ என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது 1781 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ந் தேதி அன்று இச்சத்திரம் ஸ்ரீ விசைய ரெகுனாதத்தொண்டைமானாராவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதை குறிக்கிறது.
விஜய ரகுநாத தொண்டைமான் 1759 மே நாளன்று திருமலை ராயர் தொண்டைமான் சாகிப்புக்கும் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். ஆட்சியிலி ருந்த இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரிசின்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார்.
விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடுநவாபான முகமது அலி கான் வாலாஜா இவருக்கு “ராஜா பகதூர்” என்ற பட்டத்தை வழங்கினார்.
விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார் குறிப்பாக பாளையக்காரர் போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். இதனை அங்கீகரிக்கும் விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைக்கோட்டையை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர்.
தஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக் கொண்டாலும், புதுக்கோட்டை தொண்டைமான்களின் போர்க்கால உதவிக்காக அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக புதுக்கோட்டை தொண்டைமான் அரசை தனித்து இயங்கிட அனுமதித்தனர்.
ஆயிப்பட்டி ஊர்ப்பெயரும் கல்வெட்டும்
ஆயிப்பட்டி கிராம எல்லைகுட்பட்ட பகுதியில் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் சத்திரம் அமைந்திருப்பதன் மூலம் ரெகுநாத தொண்டைமான் மன்னர் தனது தாயாரின் பெயரிலேயே இவ்வூருக்கு பெயர் சூட்டியிருப்பதை அனுமா னிக்க முடிகிறது ஆயி என்ற பெயருடன் மன்னர்களின் மனைவிகள் தொண்டைமான் மன்னர்களின் மனைவிகள் குடும்ப வழக்கப்படி ஆயி என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆயி என்பதற்கு அன்னை என்று பொருள். குறுந்தொகையில் 40 ஆவது பாடல் “யாயும் ஞாயும் எம்முறைக் கேளிர், என்ற வரியில் யாயும் (என் தாயும்), ஞாயும் ( உன் தாயும்), எவ்விதத் தில் உறவினர் என கேள்வி எழுப்புகிறது, அதே பொருள் படும் படி மராட்டிய மொழியிலும் , கன்னடத்திலும் தாயைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது.
தமிழகத்தின் நாட்டார் வழக்கு மொழியில் அப்பாவின் தாயை அப்பாயி என்றும். அம்மாவின் தாயை அம்மாயி என்றும் ,கோவிலில் கிராம வழிபாட்டு தெய்வங்களை மாரியாயி, காத்தாயி என அழைக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளதையும் கருத்திற்கொள்ளும்போது, தொண்டைமான் மன்னர்கள் தம் குடும்பத்து பெண்களை உயர்நிலையில் மதித்து நடத்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.
தொண்டைமான் மன்னர் குடும்பத்தினரிடம் இது சார்ந்த தகவல் சேகரிக்கும்போது, ராஜ ஆயி என்ற ஒற்று பெயருடன் அழைக்கப்படுபவர்கள் தொண்டைமான் குடும்ப வாரிசுகள் எனவும், ஏனைய ஆயி என்ற அடைமொழியில் அழைக்கப்படு பவர்கள். மன்னர் குடும்பத்தை சாராத வம்சாவளியில் மன்னரை மணமுடித்தவர்களாகவும், திருமணத்திற்கு மன்னர் நேரில் செல்லாமல் தனது வாளையும் குதிரை வண்டியையும் அனுப்பி வைத்து , அந்த வாளையே மணமகனாக கருதி மணமுடித்து அதே குதிரை வண்டியில் அரண்மனைக்கு வந்து மன்னரோடு வாழும் நடைமுறை இருந்துள்ளதையும்.
மணமகளின் குடும்பத்தாருக்கு உரிய மரியாதை செய்து , நிலம் , குளம் , பொருள் என அனைத்தையும் மணமகள் குடும்பத்திற்கு வழங்கியதோடு, இவ்வாறு மணமுடித்த ஊர்களில் சத்திரம் அமைத்து வழிபோக்கர்களுக்கும் , ஊர் மக்களுக்கும் உணவு வழங்கி பெருமை சேர்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
கால்நடைகளுக்கு உதவிய சத்திரங்கள் :
மனிதர்கள் வணிகம் , திருவிழா, வழிபாடு, உறவினர்களின் இல்லங்களுக்கு விருந்தினராக செல்வது என நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது . இதற்கு பெரிதும் உதவியவை கால்நடைகளே குறிப்பாக மாடு , குதிரை, கழுதை, யானை என அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறும் பயணிக்கும் இடத்திற்கு ஏற்றவாறும் அவற்றை பயன்படுத்திக்கொள்வர்.
குறிப்பாக மாடுகள் மற்றும் குதிரைகளே அதிகம் வண்டிகளோடு பிணைக்கப்பட்டு இழுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளன. நெடிய பயணத்தில் மனிதர்களை விடவும் அதிக இன்னலுக்கு உள்ளாகுபவையாக கால்நடைகள் இருந்துள்ளன. மனிதர்களோடு காலநடைகளுக்கும் தேவையான நீர் மற்றும் இரவு நேரத்தில் பாதுகாப்பான தங்குமிடமாகவும், அதிக வெப்ப நாட்களில் நெடுந்தூர பயணிகள் கட்டணமின்றி ஓய்வெடுக்கவும் இத்தகைய சத்திரங்கள் உதவியுள்ளன.
சத்திரங்களை காப்போம்
பழங்கால வழிப்போக்கர்களுக்கான ஓய்விடமாக இருந்த இத்தகைய சத்திரங்கள், மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் உள்ளன. இவை முன்னூறு ஆண்டுகளாக பலருக்கும் இளைப்பாறவும் , ஓய்வெடுக்கவும், உணவருந் தவும், உதவிய கட்டுமானமாகும், நமது ஊரில் இருக்கும் இத்தகைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க உள்ளூர் இளைஞர்களும் , தன்னார்வலர்களும், பொதுமக்களும் , உள்ளூர் நிர்வாகத்தினரும் சிறிய அளவில் பராமரிப்பு செய்தாலே சாலையோரம் செல்லும் பலரையும் ஈர்ப்பத்தோடு , நம் முன்னோர்களின் பெருமையையும் , நம் ஊர் பெருமை யையும் காத்திட முடியும் என்றார்.
இக்களப்பணியின் போது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகக்ழகத்தின் இணைச்செயலாளர் மு.முத்துக்குமார் , உறுப்பினர் ரஹ்மதுல்லா, தமிழாசிரியர் ஆர்.செல்வமணி மற்றும் உள்ளூர் விவசாயி பழங்கொண்டான் விடுதி பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.