Close
நவம்பர் 22, 2024 9:58 காலை

மணலி புதுநகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை

சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்த பெண்

மணலி புதுநகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் ரூ.10 லட்சம் பணத்தை இழந்த இளம்பெண் பவானி (30) ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி.  பட்டதாரியான இவர் சோழிங்கநல்லூர் அருகே உள்ள தனியார் நிறுவன அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பவானி கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைனில் ரம்மி என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.  அவ்வப்போது பணம் சம்பாதிப்பதும் அவ்வப்போது பணத்தை இழப்பதும் ஆக இருந்த இருந்து வந்த பவானியை அவரது கணவர் மற்றும் பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனாலும் உறவினர்களின் எச்சரிக்கையைக் கண்டு கொள்ளாத பவானி ஒரு கட்டத்தில் தனது 20 சவரன் நகையை அடகு வைத்து சூதாட்டத்தில் இழந்துள்ளார்.   பிறகு தனது சகோதரிகளிடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி இதனையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த சில நாட்களாக தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துவிட்டது குறித்து பவானி கவலை தெரிவிக்கும் வகையில் அழுது புலம்பியதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்துவிட்டு வருவதாக சென்ற பவானி வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் பாக்யராஜ் குளியலறைக்கு சென்று பவானியை சப்தமிட்டு அழைத்துள்ளார்.  ஆனால் உள்புறமாக தாழிட்டு நிலையில் எவ்வித பதிலும் இல்லாததையடுத்து பாக்கியராஜ் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து  மயங்கிய நிலையில் இருந்த பவானியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு பவானியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனையடுத்து பவானியின் சடலம் திங்கள்கிழமை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மணலி புதுநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பட்டதாரி இளம் பெண்ணான பவானியின் தற்கொலை மரணம் இப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

Attachments area

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top