சைபர் குற்றங்களை தடுப்பதற்காக சீனாவின் ‘ட்ரூ காலர்’ ஆப் பிற்கு பதிலாக இந்திய அரசு உருவாக்கிய சிஎன்ஏபி ஆப் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்தியாவில் சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய செயலிகளை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. இதன்படி நம்பக தன்மையற்ற சீனாவின் ‘ட்ரூ காலர்’ எனும் செயலிக்கு பதிலாக புதிய செயலியை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதை உணர முடிகிறது.
நாடு முழுவதும் செல்போன் மூலம் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் கடுமையாக இருந்தாலும் பெரும்பாலான குற்றங்கள் காவல் துறையின் கவனத்திற்கு கூட வருவதில்லை.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் உட்பட சைபர் தாக்குதல்களில் சிக்கி கொண்ட பலர் இதை வெளியே சொல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.
இது குறித்து தேசிய இணைய பாதுகாப்பு கவுன்சில் (என்சிஎஸ்ஆர்சி) இயக்குனர் காளிராஜ் கூறி இருப்பதாவது:-
டிஜிட்டல் மூலமாக பணம் பறித்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்டவிரோத பணம் பறிமாற்றம், போதை பொருட்களின் பார்சல் வந்திருப்பதாக கூறி நூதன மோசடி உள்பட 24 வகையான சைபர் குற்றங்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது.
இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகும்போது என்சிசிஆர் போர்ட்டல் அல்லது 1930 என்ற எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்கவேண்டும்.
இந்த போர்ட்டலில் 24 வகையான சைபர் குற்றங்களின் தன்மை விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. மின்னணு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்புக்கு லிங்க் வரும். அவை பெரும்பாலும் போலியானவை. அதனை உடனே கிளிக் செய்து உள்ளே போய்வி்ட்டால் உங்களது அனைத்து விவரங்களும் சைபர் கிரிமினல்களின் கைக்கு போய்விடும். எனவே மக்கள் இதில் கவனமாக இருக்கவேண்டும்.
உங்களது செல்போன் தொலைந்து விட்டால் அதை எடுத்து யாரும் தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு மத்திய அரசின் சிஇஐஆர் என்ற போர்ட்டலில் உங்களது செல்போன் ஐஇஎம்ஐ எண்ணை உடனே பதிவு செய்யவேண்டும். அதையடுத்து அந்த எண் தீவிரமாக கண்காணிக்கப்படும். அதனை யாரவாது தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்படும்.
அது போல் மத்திய தொலைத்தொடர்பு துறையின் மற்றொரு போர்ட்டலான sanchar saathi.gov.in ல் உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் உங்களது பெயரில் உள்ள எத்தனை சிம் கார்டுகள் உள்ளன? அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் தேவை இல்லாத சிம் கார்டுகளை செயலிழக்க செய்ய வேண்டுமானால் அதுகுறித்து மேற்கண்ட போர்ட்டிலில் பதிவிட வேண்டும். அடுத்த ஒரு வார காலத்திற்குள் செயலிழக்க செய்யப்படும்.
சீனாவை சேர்ந்த ட்ரூ காலர் என்ற செயலியில் இடும் பதிவுகள் அனைவராலும் பார்க்கும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதி்ல் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு சி என் ஏ பி என்ற செயலியினை மகராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கும் வர இருக்கிறது. இதன் மூலம் சைபர் கிரைம் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.